சென்னை, மார்ச் 18:

காவிரி குண்டாறு இணைப்புக்கு மாநில அரசு ரூ.100 கோடியை முதல்கட்டமாக ஒதுக்கியிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டசபையில் தெரிவித்தார்.

சட்டசபையில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை மானிய கோரிக்கை மீது நடைபெற்ற விவாதத்தில், தங்கம் தென்னரசு : காவிரி – குண்டாறு இணைப்பு திட்டம் காலதாமதம் ஆகிறது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் மத்திய அரசு விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து உள்ளது.

மத்திய அரசு நிதி கொடுக்காவிட்டாலும் மாநில அரசே நிதி ஒதுக்கி இதனை செயல்படுத்த நிலம் எடுக்கும் பணிக்கு முதல் கட்டமாக 700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்தியது அதிமுக அரசுதான். மேலும் 142 அடியாக இருக்கும் அணையை 152 அடியாக உயர்த்தி பலப்படுத்த நீதிமன்றம் உத்தரவு கொடுத்து வனப்பகுதிகளில் மரம் வெட்டுவதற்கான பணிகளுக்கு கேரள அரசு அனுமதிக்கவில்லை.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது இது இரு மாநில பிரச்சனையாக இருக்கக் கூடிய நிலையில் இதனை சுமுகமாக அணுக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல தீர்ப்பு பெற்று முல்லை பெரியாறு அணையை பலப்படுத்தி அதனை 152 அடியாக உயர்த்துவோம் .

எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் : ஆழியாறு பரம்பிகுளம் குறித்து கேரள அரசுடன் பேச்சுவார்த்தை எந்த நிலையில் உள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி: எந்த ஒரு புதிய அணை கட்ட வேண்டும் என்றாலும் கீழ் உள்ள மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும் ஆனால் அவ்வாறு எந்த அனுமதியும் தற்போது பெறப்படுவதில்லை.

கேரள முதலமைச்சரை நேரில் சந்தித்து பரம்பிக்குளம், ஆழியாறு, ஆனைமலையாறு நீராறு உள்ளிட்டவைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தமிழகம் கேரளா இடையே உள்ள நீண்டகால பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்.

கேரள முதலமைச்சரும் கேரள நீர்வளத் துறை அமைச்சரும் தமிழகத்திற்கு துணைநின்று வருகின்றனர் எனவே இரு மாநிலத்திற்கு இடையிலான பேச்சுவார்த்தை நல்ல முடிவை கொண்டு வரும் என்று நம்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார்.