சென்னை, மார்ச் 18:

உறவினரின் குழந்தையை பணத்திற்காக கடத்திக்கொண்டு தப்பியோடிய வடமாநில வாலிபரை, சில மணிநேரங்களிலேயே போலீசார் மடக்கிபிடித்து கைது செய்து குழந்தையை மீட்டனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் ராபிஷியாம் (வயது 28). இவரது மனைவி ராக்ஷி (வயது 25). இவர்களுக்கு 2 வயதில் ஆதேஷ் என்னும் குழந்தை உள்ளான். ராபிஷியாம் ஆவடி சேக்காடு பகுதியில் குடும்பத்துடன் தங்கி டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்துவருகிறார்.

இவருக்கு உதவி செய்வதாக கூறி, கடந்த 10 நாட்களுக்குமுன்பு தூரத்து உறவினரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த சனித்குமார் (வயது 22) என்பவர் ராபிஷியாமின் வீட்டிற்கு வந்துள்ளார்.
ராபிஷியாமிற்கு உதவியாக இருப்பதுபோல் நடித்துவந்த சனித்குமார், நேற்று பகல் 1 மணியளவில் சாக்லெட் வாங்கி தருவதாக கூறி ஆதேஷை வெளியில் அழைத்து சென்றுள்ளார்.

ஆனால், மாலை நேரம் ஆகியும் சனித்குமார் வீடு திரும்பாததால், அவரது செல்போனை தொடர்புகொண்டு ராபிஷியாம் பேசியுள்ளார். தனக்கு ரூ.5 லட்சம் தந்தால், குழந்தையை தந்துவிடுவதாக சனித்குமார் மிரட்டியதாக தெரிகிறது.

அதிர்ச்சியடைந்த ராபிஷியாம் உடனடியாக ஆவடி போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் சிக்னல் மூலம் சனித்குமாரின் இருப்பிடத்தை கண்டறிந்துள்ளனர். அதனடிப்படையில், ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள ஒரு லாட்ஜில் குழந்தையுடன் சனித்குமார் தங்கியிருப்பது தெரியவரவே, தனிப்படை போலீசார் இரவோடு இரவாக அங்கு விரைந்து சென்றுள்ளனர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் சம்பவ இடத்தை அடைந்த போலீசார், சனித்குமாரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, குழந்தையை மீட்டனர்.