சென்னை, மார்ச் 18: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே போல் ரஜினி, கமல்,அஜித், சூர்யா, விக்ரம் படங்களும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமையை வாங்கிய நிறுவனமும் அந்த தேதியில் உலகம் முழுவதும் படத்தை வெளியிட முடியாத சூழ்நிலையில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

இதே போல் ஏப்ரல் 14-ல் வெளியாக இருந்த சூர்யாவின் ‘சூரரை போற்று’ படமும் அன்றைய தினம் ரிலீஸ் ஆகாது எனத் தெரிகிறது.

தற்போது படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் ஷுட்டிங் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.

மேலும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘வலிமை’ படமும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் ‘கோப்ரா’ படமும், ஷுட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாத நிலை உள்ளது.

இதே போல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன்-2 படப்பிடிப்பில் நடைபெற்ற கிரேன் விபத்து காரணமாக கடந்த 20 நாட்களுக்கு மேலாக அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இந்த படம் வெளியாவது மேலும் தாமதமாகும் சூழ்நிலை உருவாகி உள்ளது.