திருவள்ளூர், மார்ச் 18:

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் திருவள்ளுர் நகராட்சி ஆகிய துறைகள் சார்பாக, கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை பொதுமக்களிடம் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் நேரில் பார்வை யிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.

திருவள்ளுர் இரயில் நிலையத்தில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை மற்றும் திருவள்ளுர் நகராட்சி ஆகிய துறைகள் சார்பாக, கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளான கை கழுவும் முறை விளக்குவது, கிருமி நாசினிகளை தெளிப்பது உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாவட்டத்தில் அனைத்துத் துறைகளான பொது சுகாதாரம் (ம) நோய்த்தடுப்பு மருந்துத்துறை, சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளான மக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்ட பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், கோவில் வளாகங்கள், அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் தீவிரமாக போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

கொரோனா நோய் தொற்று திருவள்ளுர் மாவட்ட எல்லைப்பகுதிகளான பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, எல்லாபுரம், பூண்டி, கும்மிடிப்பூண்டி முதலிய வட்டாரங்களில் மாநில எல்லையோரப்பகுதிகளில் 14 இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்காணிக்க மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அம்முகாம்களில் 1501 நபர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் எவருமில்லை.