மும்பை, மார்ச் 18: ஏப்ரல் 15-ம் தேதி வரையிலும் இதே போன்ற அசாதார சூழல் நீடித்து, ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் ரத்தாகும் பட்சத்தில், இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு (பிசிசிஐ) ரூ.3,900 கோடி நஷ்டம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து, இந்திய அரசு தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது, உலகம் முழுதும் பல விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டு விட்டன, பணமழை பொழியும் இந்தியாவின் முக்கிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தள்ளிவைக்க வேண்டுமா? அல்லது ரத்து செய்ய வேண்டுமா? என்பது குறித்து பிசிசிஐ நிர்வாகிகள் ஐபிஎல் அணி உரிமையாளர்கள் கடந்த வாரத்தில் சந்தித்துப் பேசுகையில், ஏப்ரல் 15-ம் தேதி வரை ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அதில் பங்கேற்ற அணியின் உரிமையாளர்கள், தங்களுக்கு பணம் கூட பிரச்சினையல்ல பாதுகாப்புத்தான் முக்கியம் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ரசிகர்கள் இல்லாமல் நடத்தலாம் என்றாலும் தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு உள்ளிட்டவைகளுக்கு குறைந்தது 500 பேராவது தேவைப்படும். ஆனால் மத்திய அரசு 10 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று தெரிவித்துள்ளது. மகாராஷ்ட்ராவில் பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகமாக 41 ஆக அதிகரித்துள்ளதால் அங்கு நிச்சயம் போட்டிகள் அனுமதிக்கப்படாது. இதேநிலை தொடர்ந்தால் போட்டியை ரத்து செய்வது தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டுவிடும். அவ்வாறு கடினமுடிவை பிசிசிஐ எடுக்கும் பட்சத்தில், ரூ.3,900 கோடி இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.