திருத்தணி, மார்ச் 18:
ஆர்கே பேட்டை ஊராட்சியில் பொதுமக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வராமல் போதிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பதுடன் அரசியல் பாகுபாடு இன்றி சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று புதிய ஒன்றியக்குழு தலைவருக்கு பி.எம்.நரசிம்மன் எம்எல்ஏ அறிவுரை வழங்கினார்.

ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய குழு முதல் கூட்டம் அலுவலக கூட்டரங்கத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் தலைமையில் நடை பெற்ற கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாவட்ட கவுன்சிலர் ஜெ. பாண்டுரங்கன் முன்னிலை வகிக்க மேலாளர் செல்வம் அறிக்கை வாசித்தார். இந்த கூட்டத்தில் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
உள்ளாட்சி தேர்தலில் செய்யப்பட்ட செலவினங்களுக்கான பட்டியலுக்கு நிதி வழங்க மன்ற கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருத்தணி எம்எல்ஏ பி.எம்.நரசிம்மன் பேசியதாவது:-

பெண்கள் பிரிவிற்கு ஒதுக்கப் பட்டுள்ள இந்த ஒன்றியக்குழு தலைவர் சிறப்பாக பணியாற்ற வேண்டும். புதியதாக வெற்றி பெற்று வந்திருக்கிற அனைத்து கவுன்சிலர்களும் அந்தந்த பகுதியில் அரசியல் கலப்பில்லாமல் கிராம ங்களின் வளர்ச்சிக்கு அதிகாரிகள் ஒத்துழைப்போடு பாடுபடவேண்டும்.

கோடைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க தனிப்பட்ட முறையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

எந்த நேரமும் இந்த ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு கட்சி பாகுபாடு இல்லாமல் என்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உதவி செய்ய காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக புதிய உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். முதலில் ஒன்றிய குழு தலைவர் ரஞ்சிதா ஆபாவாணன் திருக்குறளை சொல்லி தன் தலைமை உரையில் தமிழுக்கே பெருமை சேர்த்தது அனைவரும் உற்சாகமாக மேஜையை தட்டி வரவேற்றனர்.