சென்னை,மார்ச்.18:

கொரோனா தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என சட்டசபையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசுகையில்: அமெரிக்கா மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இது குறித்து அரசுக்கு தெரியுமா? இது தொடர்பாக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என கேள்வி எழுப்பினர்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர்: கொரோனாவிற்கு தற்போது வரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. காய்ச்சல், இருமல், சளிக்கு என்ன மருந்து கொடுக்கப்படுமோ அதுதான் இப்போது கொடுக்கப்பட்டு வருகிறது . கொரோனா பரிசோதனை அனைவரும் எடுக்க வேண்டிய தேவை இல்லை.

பாதிக்கப்பட்ட நாடுகள், பாதிக்கப்பட்ட மாநிலங்கள், மேலும் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் தொடர்பு இருந்தால் அல்லது மூன்று வகையான அறிகுறிகள் இருந்தால் மட்டுமே மருத்துவர்களின் அறிவுரையோடு சாம்பிள் எடுக்க வேண்டும். எனவே அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய தேவையில்லை.

நாளை முதல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரானா பரிசோதனை மையம் செயல்படத்துவங்கும், அதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகளிலும் விரைவில் கொரோனா கண்டறியும் ஆய்வு மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து குறித்து விரைவில் நல்ல செய்தி வரும். என்றார்.