திருச்சி, மார்ச் 18:
கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி மாவட்டம் முழுவதும் உஷார் நிலை காணப்படுகிறது. சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

திருச்சி மாவட்டம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரம், வருவாய், உள்ளாட்சி நிர்வாகம், காவல், போக்குவரத்து, கால்நடை பராமரிப்பு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, மாவட்ட கொள்ளைநோய் தடுப்புப் பிரிவு, பள்ளிக் கல்வித்துறை, உயர்கல்வித்துறை, இந்துசமய அறநிலையத்துறை, உணவு பாதுகாப்புத்துறை உள்ளிட்ட துறைகள் 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன.

சுற்றுலா தலங்கள் மூடல்: மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்கும் முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, புளியஞ்சோலை, பச்சைமலை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் அரசின் மறு உத்தரவு வரும் வரையில் மறு தேதி குறிப்பிடாமல் மூடப்பட்டுள்ளன.

கோயில்கள் வெறிச்சோடின: மாவட்டத்தில் பிரதான கோயில்களாகவும், எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், திருவானைக்கா சம்புகேசுவரர் திருக்கோயில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் உள்ளிட்ட பெரும்பாலன கோயில்கள் பக்தர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்துநிலையம், ஆம்னி பேருந்துநிலையம், ரெயில் நிலையங்கள் அனைத்து இடங்களிலும் சுழற்சி முறையில் கிருமி நாசினிகள் தெளித்து சுத்தப்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன.