சென்னை, மார்ச் 18:

இந்தியன்- 2 படப்பிடிப்பில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஷங்கர் உள்ளிட்ட 23 பேரிடம் இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேரில் விசாரணை நடத்தினர்.

லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியை அடுத்த ஈவிபி சிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது.
கடந்த மாதம் இரவு 8 மணியளவில் கமல், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்த காட்சியை ராட்சத கிரேன் கொண்டு இயக்குனர் ஷங்கர் படமாக்கி வந்தார். அப்போது திடீரென ராட்சத கிரேன் அறுந்து கீழே விழுந்தது. இதில் உதவி இயக்குனர், கலை உதவி இயக்குனர் மற்றும் உதவியாளர் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் மேற்பட்டோர¢படுகாயமடைந்தனர்.

இது குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், பல்வேறு தரப்பினர் கேட்டு கொண்டதன் பேரில் வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி கமிஷனர் உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி தலைமையில் போலீசார் கமல்ஹாசன், ஷங்கர், லைகா நிர்வாகி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர். இந்தநிலையில் சம்பவம் நடந்த ஈவிபி பிலிம் சிட்டிக்கு இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட 23 பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று வரவழைத்தனர். காலை 10.30 மணியளவில் அங்கு வந்த அனைவரையும் துணை கமிஷனர் நாகஜோதி தலைமையிலான போலீசார் உள்ளே அழைத்து சென்று படப்பிடிப்பு நடந்த அரங்குகளுக்குள் சென்று விசாரணையை தொடங்கினர்.

சம்பவம் நடந்த இடத்தில் ஷங்கர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ஆகியோரை அழைத்து சென்று சம்பவம் நடந்த அன்று எப்படி படப்பிடிப்பு நடத்தப்பட்டது. யார், யார் எங்கு இருந்தனர் என்பது குறித்து அவர்களை நடித்து காட்ட சொல்லி அதை வீடியோவாகவும் பதிவு செய்தனர்.

சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடந்த இந்த விசாரணைக்கு பிறகு அவர்களை போலீசார் அனுப்பி வைத்தனர்.