புதுடெல்லி, மார்ச் 19:  ஒலிம்பிக் போட்டியை நடத்தியே தீருவோம் என்ற உறுதியில் ஜப்பான் அரசு மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தீர்மானித்திருந்தாலும், போட்டிக்காக தங்களை தயார் படுத்திகொள்ளமுடியாத அசாதாரண சூழ்நிலையே தற்போது நிலவிவருவதாக வீரர், வீராங்கனைகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உலக அளவில் இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 8,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாரபட்சம் பார்க்காமல் பரவிவரும் இந்த வைரஸ் தொற்றுக்கு, விளையாட்டுத் துறை மட்டும் விதிவிலக்கா என்ன? இதன்காரணமாகவே, ஒலிம்பிக் போட்டிகள் நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகம் ஒருபுறம் நிலவிவந்தாலும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐஓசி) டோக்கியோ ஒலிம்பிக் குறிப்பிட்ட தேதியில் நிச்சயம் நடைபெறும் என தொடர்ந்து கூறி வருகிறது. ஜூலை 24-ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும்4 மாதங்கள் உள்ளதால் தற்போதைய நிலையில் எந்தவித கடினமான முடிவையும் எடுக்க தேவையில்லை என்று கூறியுள்ளது. இதனிடையே, வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக தற்போது முன்னணி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்கி உள்ளனர்.

மிகுந்த ஏமாற்றம்: டூட்டீ சந்த்
இந்தியாவின் தடகள வீராங்கனை டூட்டீ சந்த் கூறுகையில், டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு முன்னதாக பயிற்சி மேற்கொள்ள கடந்த 2-ம் தேதி ஜெர்மனி செல்ல முடிவு செய்து இருந்தேன். அங்கு பலம் வாய்ந்த ஐரோப்பிய போட்டியாளர்களுடன் ஓடி பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டேன். அதன் மூலம் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம் என்று நம்பினேன். தற்போது எனது அனைத்து திட்டங்களும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வீணாகி விட்டது. ஜெர்மனி செல்ல விசா உள்பட அனைத்து பயண ஏற்பாடுகளையும் செய்து இருந்தேன். ஆனால் கொரோனா பரவலால் பயிற்சிக்கு வரவேண்டாம் என்ற தகவல் பயிற்சி மையத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், நான் மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளாகி இருக்கிறேன் என்றார்.

ஆரோக்கியத்தை பணயம் வைக்க விருப்பமா?
கிரீஸ் நாட்டின் போல்வால்ட் வீராங்கனையான கேத்ரினா ஸ்டெஃபானிடி தனது டிவிட்டர் பதிவில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது எங்களது உடல் நலனையும், குடும்பத்தினரின் ஆரோக்கியத்தையும், பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் பணயம் வைக்க விரும்புகிறதா? ஒலிம்பிக் போட்டி 4 மாதங்களுக்குப் பிறகுதான் நடைபெற போவதாக கூறுகிறீர்கள். ஆனால், இன்றே நீங்கள் எங்களை ஆபத்தில் தள்ளுகிறீர்கள் என அவர் பதிவிட்டுள்ளார்.