புதுடெல்லி, மார்ச் 20:  கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் ஏப்ரல் 15-ம் தேதி வரை வீரர்கள் தேர்வு மற்றும் விளையாட்டு போட்டிகள் எதையும் நடத்தவேண்டாம் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அனைத்து மாநில விளையாட்டு சங்கங்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், அனைத்து விளையாட்டு அமைப்புகளும் அவற்றின் துணை பிரிவுகளும் ஏப்ரல் 15-ம் தேதி வரை எந்தவித போட்டிகளையும், வீரர்கள் தேர்வையும் நடத்த வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சி முகாமுக்குள் சரியான நெறிமுறைகளை கடைபிடிக்காத வெளிநபர்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், கொரோனா வைரஸ் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் விளையாட்டு நட்சத்திரங்கள் அரசு உத்தரவின் படி கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர். இதில் யாருக்கும் விதிவிலக்கு தரப்படமாட்டாது. அன்னிய நாடுகளில் இருந்து வரும் அனைவரும் இதை பின்பற்ற வேண்டும், என்றார்.