சுவிட்சர்லாந்து, மார்ச் 20:  உலகநாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகளை நடத்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முயற்சி மேற்கொண்டுவருகிறது.

அதன்படி, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது, ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக தயாராகும்படி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. ஒலிம்பிக் போட்டி ரத்தானால் ஜப்பானுக்கு ஏறக்குறைய ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும், 56 ஆண்டுகளுக்குபிறகு கிடைத்து இருக்கும் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் ஜப்பான் அரசாங்கமும் எல்லாவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இதன்தொடர்ச்சியாக, ஒலிம்பிக் தீபம் கிரீஸ் நாட்டின் விளையாட்டு அமைச்சரிடம் இருந்து ஜப்பானின் முன்னாள் நீச்சல் வீராங்கனை இமோட்டோ நவோக்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ஒலிம்பிக் தீபம் போட்டி நடைபெற உள்ள டோக்கியோ நகருக்கு கொண்டு செல்லப்படுகிறது.