சென்னை, மார்ச் 20: இங்கிலாந்தில் நடைபெற உள்ள வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தற்போது நிலவிவரும் அசாதார நிலையை கருத்தில் கொண்டு, வெஸ்ட் இண்டீசிலேயே நடத்த நாங்கள் தயாராக உள்ளதாக அதன் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஜானி கிரேவ் தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் (விண்டீஸ்) கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டு இருக்கிறது. இந்த நிலையில், உலக நாடுகளில் நிலவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பு என்ற அசாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு, தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடும்படி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து விண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜானி கிரேவ் கூறுகையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டாம் ஹாரிசனிடம் கடந்த சில தினங்களில் இரண்டு முறை பேசியுள்ளேன். அப்போது அவரிடம் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி நடந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம், முடிந்த அளவுக்கு ஆதரவாக, உதவிகரமாக இருப்போம் என்று உறுதி அளித்தேன். மேலும், உங்களுக்கு சவுகரியமாக இருப்பதாக உணர்ந்தால், வெஸ்ட் இண்டீஸ்-இங்கிலாந்து டெஸ்ட் தொடரை தங்கள் நாட்டிலேயே (வெஸ்ட் இண்டீஸ்) நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளேன், என்றார்.