புதுடெல்லி, மார்ச் 21: சுய ஊரடங்கு செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று வரலாறு காணாத வகையில் ஒட்டுமொத்த நாடும் நாளை முடங்குகிறது.
நாட்டிலுள்ள பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள், மதுபான கடைகள், ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும். பஸ், ரெயில், லாரிகள் ஓடாது, விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மக்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனாவை தடுக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொள்கிறார்கள்.

கொரோனா வைரஸ் தொடர்பாக பிரதமர் மோடி கடந்த வியாழக்கிழமை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது 22-ம் தேதி தேசிய அளவில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு அனைத்து தரப்பு மக்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அனைத்து வணிகர் சங்கங்களும், ஓட்டல் அதிபர் சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பேரவைத் தலைவர் வெள்ளையன் ஆகியோர் வணிகர்கள் அனைவரும் கடைகளை அடைத்து கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர்.

கோயம்பேடு சந்தையில் சுமார் 4500 காய்கறி, பழம் மற்றும் பூக்கடைகள் இன்று நள்ளிரவு முதல் நாளை இரவு முதல் மூடப்பட்டிருக்கும் என்று சந்தையின் கமிஷன் ஏஜெண்ட்களின் சங்கத் தலைவர் எஸ்.சீனிவாசன் அறிவித்துள்ளார்.

கோயம்பேடு சந்தையில் 800-க்கும் மேற்பட்ட லாரிகளும் வராது என அறிவிக்கப்பட்டுள்ளன. மருந்து மற்றும் பார்மசி சம்பந்தப்பட்ட நிறுவனங்களை தவிர பிற அனைத்து நிறுவனங்களும் மூடப்படும். காலை 7 மணிக்கு பிறகு பால் வினியோகம் நிறுத்தப்படும் என பால் முகவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

பெட்ரோல் பங்குகள், உணவு விடுதிகள், ரிசார்டுகள் மூடப்பட்டிருக்கும் என இதன் சங்க நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

ரெயில்வே வாரியம் விடுத்துள்ள அறிவிப்பில், நாடு முழுவதும் 2,400-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில்கள், 1300-க்கும் மேற்பட்ட விரைவு ரெயில்கள் நாளை ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோளின்படி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்துக்கழகங்களின் பஸ்கள் எதுவும் ஓடாது என்றும், மெட்ரோ ரெயில்களும் அன்றைய தினம் இயங்காது என்றும் கூறி உள்ளார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில் கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர மாநில எல்லைகளை இணைக்கும் சாலைகள் இன்று முதல் வரும் 31-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும். இந்த சாலைகளில் அத்தியாவசிய பொருட்களான பால், ªட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றி வரும் லாரிகள் மற்றும் இறப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிக்கும் இலகுரக வாகனங்கள் மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூடல்:

பிரதமரின் அறிவிப்பை தொடர்ந்து தமிழகத்தில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று அமைச்சர் தங்கமணி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இதே போல நாடு முழுவதும் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு நாடே முடங்கும் நிலைக்கு தயாராகி வருகிறது.