சென்னை, மார்ச் 21: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் சிறப்பான நடவடிக்கைகளுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக – கர்நாடகா, கேரளா எல்லைகள் மூடல், பள்ளிகளுக்கு விடுமுறை, கோயில்கள் மூடல் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எடுத்து வருகிறார்.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழ்நாட்டில் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

அதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி நன்றி தெரிவித்ததோடு, தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், நாளை (22-ம் தேதி) பிரதமர் அறிவித்த 9 அம்சங்களும் தமிழ்நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்