சென்னை, மார்ச் 21: கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழக சட்டசபை கூட்டம் முன்கூட்டியே முடிவடைகிறது. வரும் 31-ம் தேதியுடன் பட்ஜெட் கூட்டத் தொடர் முடிவடையும் என்று சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் இதுவரை 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பரவுவதால் தலைமை செயலகத்துக்கு பணியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் தவிர பொதுமக்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் சட்டபேரவையை ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், காங்கிரஸ் ராமசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார். இதனால் நேற்று மதியம் அலுவல் ஆய்வு கூட்டம் கூடியது. அதில் சட்டபேரவையை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் அந்த கூட்டத்தில் இறுதி முடிவு எட்டப்படாததால் இன்று நண்பகல் 12 மணி அளவில் அலுவல் ஆய்வு கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தில் வரும் திங்கள் முதல் காலை – மாலை என இரு பிரிவுகளாக பேரவை நடக்கும் என்றும், காலை 10 மணிக்கும் மாலை 5 மணிக்கும் பேரவை கூடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் திங்கள் காலை இறுதி துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தல், முன்பான மானிய கோரிக்கை தாக்கல் செய்தல், தொடர்ந்து கைத்தறி மற்றும் துணி நூல் துறை, செய்தி மற்றும் விளம்பரம்துறை, எழுத்து பொருள் மற்றும் அச்சு துறைக்கான மானிய கோரிக்கை நடக்க உள்ளது. செவ்வாய்க்கிழமை (24-ம் தேதி) காலை தொழில் துறை மீதான மானிய கோரிக்கையும், மாலை வணிக வரி, பத்திரப்பதிவு மற்றும் பால்வளத்துறை மீதான மானிய கோரிக்கை நடக்கிறது. தொடர்ந்து புதன்கிழமை (25 ஆம் தேதி) தெலுங்கு வருட பிறப்பு அரசு விடுமுறை ஆகையால் பேரவைக்கு விடுமுறை தொடர்ந்து 31 -ம் தேதி வரை பேரவை நடக்கும் என்று சபாநாயகர் பேரவையில் அறிவித்துள்ளார்.