லக்னோ, மார்ச் 21: கொரோனா வைரஸ் பாதித்த பாடகி மீது அலட்சியமாக செயல்பட்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற வசுந்தரா சிந்தியா, அவரது மகன் துஷ்யந்த் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

துஷ்யந்த் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அனைத்து சந்திப்பு நிகழ்ச்சிகளையும் ராம்நாத் ரத்து செய்துள்ளார்.

பாலிவுட் பாடகி கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் இங்கிலாந்தில் இருந்து லக்னோவுக்கு வந்தபோது, கொரோனா அறிகுறி காணப்பட்டதை தொடர்ந்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நேற்று கொரோனா உறுதி ஆனது.

இதற்கிடையே, அவர் நடத்திய விருந்து நிகழ்ச்சியில் பிஜேபி எம்.பி.யும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவின் மகனுமான துஷ்யந்த் சிங் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது. அதன் பிறகு அவர் நாடாளுமன்றத்துக்கும் சென்றார். இதனால், அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக காவல் ஆணையர் சுர்ஜித் பாண்டே கூறும்போது, சரோஜினி நகர் காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

ஐபிசி பிரிவுகள் 269 (கவனக்குறைவான செயலால், உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்றைப் பரப்ப வாய்ப்புள்ளது), 270, 188 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சரோஜினி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோ தலைமை மருத்துவ அதிகாரியின் புகாரின் பேரில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே துஷ்யந்த் சிங் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து ராம்நாத் கோவிந்த் அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்திருக்கிறார்.