மும்பை, மார்ச் 21: பிரபல நடிகை அமலா பால் மும்பை பாடகரை நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களின் திருமணப்படமும் வலைதளத்தில் வெளியாகின.

கடந்த 2014-ல் இயக்குநர் ஏ.எல்.விஜய்யைக் காதல் திருமணம் செய்தார் நடிகை அமலா பால். இவர்கள் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு 2017-ல் விவகாரத்து செய்துகொண்டார்கள். கடந்த வருடம் ஜுலை மாதம், மருத்துவர் ஐஸ்வர்யாவை ஏ.எல்.விஜய் மணந்தார்.

இந்நிலையில் கடந்த சில வருடங்களாக மும்பை பாடகர் பவ்நிந்தர் சிங்கைக் காதலித்து வந்தார் அமலா பால். நேற்று திடீரென திருமணப் புகைப்படங்கள் எனக் குறிப்பிட்டு சில புகைப்படங்களை பவ்நிந்தர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்தார். இதனால் பவ்நிந்தரை அமலா பால் திருமணம் செய்தது உறுதியானது. எனினும் அந்தப் புகைப்படங்களை சில மணி நேரத்தில் பவ்நிந்தர் நீக்கிவிட்டார்.

ஆனால், இந்தப் புகைப்படங்களை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இதனால் தனது திருமணம் குறித்த செய்தியை அமலா பால் விரைவில் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.