சென்னை, அக்.21: நிலவேம்பு குடிநீரைப் பருகுவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் கூறியுள்ளது. இதுதொடர்பாக இதுவரை நடைபெற்ற ஆய்வு ஆதாரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்களுக்கு தடுப்பு மருந்தாகவும், அதற்கான சிகிச்சைகளுக்காகவும் நிலவேம்பு குடிநீரும், டெங்கு காய்ச்சலினால் குறையும் தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பப்பாளி இலைச்சாறு, ஆடாதொடை மணப்பாகு உள்ளிட்ட மருந்துகள் பயனளிக்கும் என்ற அடிப்படையில், நிலவேம்பு குடிநீர் உள்ளிட்ட மருந்துகளை தமிழக அரசு பரிந்துரைத்து வருகிறது.

இதன் காரணமாக காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளிலும் இது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நிலவேம்பு குடிநீர் பருகினால் மலட்டுத்தன்மை உள்ளிட்ட பக்கவிளைவுகள் ஏற்படும் என்று செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நிலவேம்பு குடிநீர் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.

எனவே, இதுதொடர்பான சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககத்தின் சார்பில் செய்தியாளர் சந்திப்பு, சென்னை அரும்பாக்கம் அரசு சித்த மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககத்தின் ஆணையர் மோகன் பியாரே, இணை இயக்குநர் மருத்துவர் பார்த்திபன், ஆயுஷ் மருத்துவத்துக்கான மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் பிச்சையா குமார் ஆகியோர் கூறியது:

நிலவேம்பு குடிநீர் என்பது நிலவேம்பு, வெட்டிவேர், விலாமிச்சு வேர், சந்தனம், பற்படாகம், பேய்புடல், கோரைக்கிழக்கு, சுக்கு, மிளகு ஆகிய 9 வகை மூலிகைகளை சம அளவு கொண்ட மருந்தாகும். இந்த 9 மூலிகைகளும் மருந்து மற்றும் அழகு சாதனச் சட்டத்தின்படி, விஷ மருந்துகள் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நிலவேம்பு குடிநீரும் இதே சட்டத்தின்கீழ் தரமான மருந்து தயாரிப்பு முறைகளின்படி தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.

முந்தைய ஆய்வுகள்: நிலவேம்பு குடிநீர் பாரம்பரிய மற்றும் பாதுகாப்பான மருந்து என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலால் (ஐ.சி.எம்.ஆர்.) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்களுக்கு நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தலாம் என, சர்வதேச மருந்துகள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குடிநீர், டெங்கு வைரஸூக்கு எதிராகச் செயல் புரிவதை உறுதிச் செய்யும் ஆய்வு முடிவுகள் அமெரிக்க மருந்து தொழில்நுட்ப ஆராய்ச்சி இதழ் மற்றும் சர்வதேச நடப்பு ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.

மேலும், நிலவேம்பு குடிநீரினால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்று தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை ஆதாரங்கள்: கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சித்த மருத்துவர்கள் ஒருங்கிணைந்து சிகிச்சை மேற்கொண்ட 132 காய்ச்சல் நோயாளிகளுக்கு நிலவேம்பு குடிநீர் கொடுத்ததில், 82 பேருக்கு காய்ச்சல் தணிந்து, ரத்த ஓட்டமும் அதிகரித்துள்ளது. 45 பேருக்கு காய்ச்சல் தணிந்து, தட்டணுக்கள் குறையாமல் அதே அளவிலேயே தக்கவைக்கப்பட்டது.

இதேபோன்று, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த 218 நோயாளிகளில் 158 பேருக்கு காய்ச்சல் தணிந்து, தட்டணுக்கள் உயர்ந்துள்ளன. 42 பேருக்கு காய்ச்சல் தணிந்து, தட்டணுக்கள் குறையாமல் அதே அளவிலேயே தக்கவைக்கப்பட்டது.

மருத்துவர் பரிந்துரை அவசியம்: எனவே, பொதுமக்கள் நிலவேம்பு குடிநீர் பருகுவது குறித்து பீதியடைய வேண்டாம். சித்த மருத்துவர்களின் பரிந்துரையைப் பெற்று நிலவேம்பு குடிநீரைப் பருகலாம்.

உரிமம் பெற்றிருக்க வேண்டும்: கடைகளில் நிலவேம்பு பொடி என்று விற்பனை செய்வதை வாங்கிப் பயன்படுத்தக் கூடாது. நிலவேம்பு குடிநீர் சூரணம் என்ற பெயரிடப்பட்ட பொடியையே வாங்க வேண்டும்.

அவற்றிலும் உரிமம் பெற்றதற்கான விவரங்கள், தயாரிப்பு தேதி, குறியீட்டு எண்கள் இடம்பெற்றுள்ளதா என்று பரிசோதித்து வாங்க வேண்டும். நிலவேம்பு குடிநீர் சூரணத்தைக் கொண்டு கசாயம் தயாரித்து மட்டுமே பருக வேண்டும், பொடியாக உட்கொள்ளக் கூடாது. கசாயம் தயாரித்த 3 மணி நேரத்தில் அதனைப் பருக வேண்டும். அதற்கு பின்பு அதனைப் பருகக் கூடாது, புதிதாக தயாரித்தே பருக வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர்.